3 மணி நேர தாமதத்துக்குப் பின் அமலுக்கு வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

டெல் அவிவ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கே அமலுக்கு வர வேண்டிய போர் நிறுத்தம் சில மணி நேரம் தாமதமானது. இதனால் கடைசி நேர பரபரப்பு கூடியது. திக் திக் நிமிடங்களைக் கடந்து தற்போது போர் நிறுத்தம் காசா மக்களுக்கு நிம்மதியைக் கொண்டு சேர்த்துள்ளது.

தாமதம் ஏன்? முன்னதாக, ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியலை அவர்கள் வெளியிடாததால், போர் நிறுத்த ஒப்பந்த அமலை நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியிருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், விடுவிக்கத் தயாராக உள்ள மூன்று பெண் பிணைக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளிட்டதைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. மூன்று மணி நேர தாமதத்துக்கு பின்பு இந்த போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.15 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 2.15 மணி)அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதன் எக்ஸ் பக்கத்தில், “காசாவில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை தொடர்ந்து தாக்குகிறோம். சிறிது நேரத்துக்கு முன்பு, ஐடிஎஃப் பீரங்கிகள் மற்றும் விமானங்கள் வடக்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளைத் தாக்கியது. ஐடிஎஃப் தாக்கவும், தடுக்கவும் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் மக்களுக்கு சிறு தீங்கு கூட நேர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் தொடங்காது.

இன்று காலை நிலவரப்படி ஹமாஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒப்பந்தத்தின்படி விடுவக்கப்பட இருக்கும் பெண் பிணைக் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிடவில்லை. ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராது.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. போர் நிறுத்தத்தின் இந்த முதல் கட்டம் 42 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சனிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஒப்புக்கொண்டபடி, விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியல் கைக்கு வரும் வரை நாங்கள் போர் நிறுத்தத்தில் சிறிதும் முன்னேற மாட்டோம். ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. அதற்கான முழு பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பெயர் பட்டியலை ஒப்படைப்பதில் ஏற்பட்டத்தற்கு தொழில்நுட்ப தோல்வியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு, கடந்த வாரம் ஏற்பட்ட போர்நிறுத்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்தது.

அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகளின் முயற்சியால் ஏற்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸால் கடத்தப்பட்ட 250 பிணை கைதிகளில்தற்போது உள்ள 98 பேரில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் இருக்கும் 2000 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.