புதுடெல்லி: புதுடெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் ‘பாஜக குண்டர்களால்’ தாக்கப்பட்டது என்று டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, “புதுடெல்லி பேரவைத் தொகுதியில் நேற்று அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதல் பாஜக குண்டர்களால் நடத்தப்பட்டது. அரவிந்த் கேஜ்ரிவாலைத் தாக்கியவர்கள் யார் எனக் கூர்ந்து கவனித்தால், அதில் ஒருவரின் பெயர் ஷங்கி என்று தெரிகிறது. அவர் பாஜகவில் துணைத் தலைவராக உள்ளார். அவர் தனது பகுதியில் அடிக்கடி பர்வேஷ் வர்மாவின் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பிரச்சாரங்களின் போது பர்வேஷ் வர்மாவுடன் காணப்படுகிறார். அவருக்கு நெருக்கமானவராகவும் உள்ளார்.
அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு 7 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்குகள் உள்ளன. ஷங்கி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, தாக்குதல், கொலை வழக்குகள் உள்ளன. ஏற்கெனவே கொள்ளையின் போது கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இவரைப் போல கொடுங்குற்றவாளிகள் அரவிந்த் கேஜ்ரிவாலை தாக்க அனுப்பப்பட்டுள்ளனர்.
மற்றொரு குற்றவாளி ரோகித் தியாகி, அவரது சமூக வலைதள பக்கத்தில் பர்வேஷ் வர்மாவுடன் உள்ள படங்கள் உள்ளன. அவரும் பர்வேஷுடன் பிரச்சாரங்களில் காணப்படுகிறார். தியாகியும் ஒரு கொடுங்குற்றவாளிதான். அவர் மீதும் பல வழக்குகள் உள்ளன.” என்று தெரிவித்தார். மேலும் அந்த இருவரின் படங்களையும் அதிஷி வெளியிட்டார்.
டெல்லியில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கேஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக நேற்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.