புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். இதன்படி, வரும் ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடைபெற உள்ளது.
முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த நாளான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வார். அதற்கு அடுத்தடுத்த நாட்களில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும். இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி விவாதங்களுக்கு பதில் உரை நிகழ்த்துவார்.
நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபறும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பொறுப்பேற்றார். வரும் மத்திய பட்ஜெட்டில் ரூ.15 லட்சத்துக்குக் கீழ் வருவாய் ஈட்டுபவர்களுக்கு வரிச் சலுக்கை வழங்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.