பனாஜி,
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஷிவானி டேபிள் (வயது 27) என்ற பெண் கோவாவுக்கு சுற்றுலா வந்தார். அவர் கோவா இயற்கை அழகை ரசிக்க வானில் பறக்கும் பாராகிளைடரில் பறக்க திட்டமிட்டார். அதன்படி அவர் வடக்கு கோவாவில் பாராகிளைடிங் நிறுவனம் ஒன்றை நாடினார்.
அதன்படி ஷிவானி பயிற்சியாளர் சுமல் (26) என்பவருடன் பாராகிளைடரில் பாறையிலிருந்து பறந்தார். ஆனால் பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேரி என்ற கிராமம் அருகே ஒரு பள்ளத்தாக்கில் பாராகிளைடிங்கின் கயிறு திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாராகிளைடிங் சேவை வழங்கிய நிறுவனம் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் சேகர் ரைசாதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு பக்க கயிறு அறுந்ததில் அவர்கள் பாறைகள் மீது சரமாரி மோதி உடல் முழுவதும் சிராய்ப்புகள் ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.