கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான வருசநாடு, மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து மூலவைகையாக உருவெடுக்கிறது.
இந்த ஆறு மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து அம்மச்சியாபுரம் அருகே முல்லைப் பெரியாற்றில் இணைந்து வைகைஅணைக்குச் செல்கிறது. கடந்த சில வாரங்களாக மழையில்லாததால் மூலவைகையில் நீரோட்டம் வெகுவாய் குறைந்தது. பல இடங்கள் மணல்வெளியாக மாறியது.
இந்நிலையில் நேற்று (சனி) இரவில் இருந்தே வருசநாடு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இன்று பகலிலும் மழை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மூலவைகையில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்கள் ஆற்றுக்குள் இறங்கவோ, கடந்து செல்லவோ வேண்டாம் என்று நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போல் தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையினால் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி ,முல்லையாறு, சுருளியாறு, பாம்பாறு, வராகநதி உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று (ஞாயிறு) மதியம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளில் அருவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் சுருளி, சின்னச்சுருளி அருவியிலும் வெள்ளம் வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க நடை விதிக்கப்பட்டது.