போபால்,
மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள கொராகலா பகுதியை சேர்ந்தவர் கலுவா அஹிர்வார். இவரது பேத்தி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக கலுவா அஹிர்வாரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கு வந்து, பக்கத்து வீட்டுக்காரர்களின் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கலுவா அஹிர்வாரின் பக்கத்து வீட்டுக்காரர்களான ரதிராம் அஹிர்வார் மற்றும் முகேஷ் அஹிர்வார் ஆகியோர் சண்டையிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் கட்டை, மண்வெட்டி உள்ளிட்டவற்றை கொண்டு கலுவா அஹிர்வாரை அவர்கள் அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கலுவா அஹிர்வாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குற்றவாளிகளான ரதிராம் மற்றும் முகேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.