போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய ஹமாஸ்; காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

காசா முனை,

இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருந்தது. இதற்கான ஒப்பந்தம் உறுதியாகியிருந்தது. ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் வசமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை இன்று விடுதலை செய்ய வேண்டும். இதற்கு ஈடாக 90 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி, இரு தரப்பும் விடுதலை செய்ய உள்ள கைதிகளின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, விடுதலை செய்யப்பட உள்ள பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரின் பெயர் விவரத்தை இஸ்ரேல் நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் விவரத்தை ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளின் பெயர் விவரங்களை ஹமாஸ் மதியம் 12 மணிக்குள் (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணி) வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், பெயர் விவரத்தை வெளியிடாமல் ஹமாஸ் ஆயுதக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது.

இதனால், ஆத்திரமடைந்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் ரபா, கான் யூனிஸ், காசா சிட்டி, வடக்கு காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

அதேவேளை, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30) அமலாக இருந்த இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் சுமார் 3 மணிநேர தாமதத்திற்குப்பின் மதியம் 2.45 மணியளவில் (இஸ்ரேல் நேரப்படி 11.15 மணி) அளவில் அமலுக்கு வந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.