முல்தான்,
பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 230 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களும் அடித்தன.
பின்னர் 93 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் அடித்து 202 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கம்ரான் குலாம் 9 ரன்களுடனும், ஷாத் ஷகீல் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினர், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வெறும் 36.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 55 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சஜித் கான் 5 விக்கெட்டும், அப்ரார் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.