பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இரு இளம்பெண்களின் புகைப்படம், வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன.
லியானார்டோ டாவின்சி வரைந்த மோனா லிசா ஓவியம், உலகின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து அழகான இளம்பெண்களை, மோனா லிசா என்று அழைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
தற்போது உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இரு இளம்பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவர்களின் புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இருவருமே மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்தவர்கள் ஆவர்.
குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ருத்ராட்ச மாலைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் உண்மையான பெயர்கள் தெரியாத நிலையில், இருவரும் மகா கும்பமேளாவின் மோனா லிசாக்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர்.
இதில் ஒரு பெண் கூறும்போது, “தினமும் ரூ.3,000-க்கு ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறேன். என்னிடம் ரூ.50,000 மதிப்புள்ள மாலைகள் உள்ளன. இவை அனைத்தையும் மகா கும்ப மேளாவில் விற்க திட்டமிட்டு உள்ளேன். இதன்மூலம் ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
மற்றொரு இளம்பெண் பாதுகாப்பு கருதி பிரயாக்ராஜில் இருந்து சொந்த ஊரான இந்தூருக்கு திரும்பி உள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது, “எங்கள் வீட்டு பெண் திடீரென சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். மகா கும்பமேளாவில் அவரை தேடி தினமும் பலர் வருகின்றனர். அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வியாபாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் துறவி ஹர்சாவும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். மாடல் அழகியான இவர் தற்போது நிரஞ்சனி அகாடா ஆசிரமத்தில் இணைந்து துறவியாக மாறி யிருக்கிறார். இதுகுறித்து ஹர்சா கூறும் போது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தேன். அதில் மன அமைதி கிடைக்கவில்லை. தற்போது மன அமைதிக்காக ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறேன்” என்று தெரிவித்தார்.