அசாமில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சுரங்கங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டம், உம்ரங்சூ பகுதியில் செயல்பட்ட நிலக்கரி சுரங்கம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்து வந்தனர். கடந்த 6-ம் தேதி எலிவளை சுரங்கம் அமைத்து அவர்கள் நிலக்கரி வெட்டியபோது தண்ணீர் பெருக்கெடுத்து சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்து இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. 7 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அசாம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 13 நிலக்கரி சுரங்கங்கள் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. அந்த சுரங்கங்களுக்கு அசாம் அரசின் கனிமவளத் துறை அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர்.
இதுகுறித்து அசாம் அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அசாம் முழுவதும் 13 இடங்களில் எலிவளை சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி வெடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சீல் வைத்து மூடப்பட்டன. எலிவளை சுரங்கங்களை தோண்டிய 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அசாம் முழுவதும் சுமார் 220 எலிவளை சுரங்கங்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் சீல் வைத்து மூடப்படும்” என்று தெரிவித்தன.