சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறையே பிப்ரவரி 6, 9 மற்றும் 12ஆம் தேதி நாக்பூர், கட்டக் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. கிட்டத்தட்ட இரண்டு தொடர்களுக்கும் ஒரே அணியை அறிவித்துள்ளனர். அதில் காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் மட்டும் பும்ரா சேர்க்கப்படவில்லை, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
பும்ரா காயம்
பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார் பும்ரா. ஆனால் கடைசி டெஸ்டின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். இப்போதைக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு முழு உடல் தகுதியை பெற்றால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பும்ரா இல்லாத பட்சத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.
ரோகித் சர்மா மற்றும் கில்
இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், அதே சமயம் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட அணியில் ஜெய்ஸ்வாலும் இடம் பெற்றுள்ளார், ஆனால் இதில் துணை கேப்டனாக கில் இருப்பதால் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல்
2023 ஒரு நாள் உலக கோப்பையை தொடரில் கே.எல் ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். தற்போது ரிஷப் பந்த் அணிக்கு திரும்பி உள்ளதால் இருவரின் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரோகித், கில், ஐயர், விராட் கோலி என அனைவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். எனவே டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்றால் ரிஷப் பந்த் அணியில் இடம் பெறலாம். இல்லை கேஎல் ராகுல் விளையாடப் போகிறார் என்றால் அக்சர் படேல் போன்ற ஒருவரை டாப் ஆர்டரில் களமிறக்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சில போட்டிகளில் அக்சர் படேல் டாப் ஆர்டரில் களமிறங்கினார்.
ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா 16 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். ஜடேஜாவிற்கு பதில் ஸ்பின்னிங் ஆல் ரவுண்டராக அக்சர் படேல் இடம் பெறலாம். மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இருப்பார். அவரும் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷமி இருப்பார்கள். பும்ரா இல்லாத பட்சத்தில் கூடுதல் ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் இடம் பெறலாம்.