அரிதான சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் அறிகுறியை முன்கூட்டியே கண்டறிந்து ஒருவரின் உயிரை சாட் ஜிபிடி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த அதிசய சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரெட்டிட் சமூக வலைதளத்தில் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளதாவது: ஒரு வாரத்துக்கு முன்பாக நான் உடற்பயிற்சி செய்ய முடிவு செய்தேன். ஆனால் அதுவே ஆபத்தாக முடியும் என நான் நினைக்கவில்லை. சிறிய அளவில் உடற்பயிற்சிகளை செய்தபோது கடுமையான நீரிழப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கும் மேல் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததையடுத்து எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கொண்டு செயற்கை நுண்ணறிவு தளமான சாட்ஜிபிடி மூலம் தரவுகளை தேடினேன்.
அப்போதுதான் எனக்கு தெரிந்தது ராப்டோமயோலிசிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பது. இது, இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுமாறு சாட்ஜிபிடி கேட்டுக்கொண்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட நான் மருத்துவமனையில் பலநாட்கள் தங்கியிருந்து பல ஆய்வுகளை செய்துகொண்டேன்.
என்னுடைய மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளை சாட்ஜிபிடியை பயன்படுத்தி பகுத்தாய்வு செய்ததில் மருத்துவர் கூறியதற்கு இணையான பதிலை அது கூறியது. சாட்ஜிபிடி மற்றவர்கள் உயிரை காப்பாற்றிய கதைகளை நான் ஏற்கெனவே அறிந்துள்ளேன். ஆனால், நான் அவர்களில் ஒருவராக மாறுவேன் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. உரிய நேரத்தில் மருத்துவ அறிவுரை கூறி எனது உயிரை காப்பாற்றிய சாட்ஜிபிடிக்கு நன்றி. இவ்வாறு அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.