திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் வசித்த கேரள பெண் கரீஷ்மா. இவர் கல்லூரியில் படிக்கும்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற வாலிபரை காதலித்தார். இந்நிலையில் கரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயமானது.
காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க விரும்பிய கரீஸ்மா, அவரை கொலை செய்வதுதான் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரே தீர்வு என முடிவு செய்தார். அவருக்கு குளிர்பானத்தில் வலி நிவாரண மாத்திரை, தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தும் பலன் அளிக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரோன் ராஜை வீட்டுக்கு அழைத்த கரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் கொடுத்தார். அதை குடித்த ஷரோன் ராஜின் உடல் உறுப்புகள் செயல் இழந்து இறந்தார்.
போலீஸ் விசாரணையில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்ட கரீஷ்மா ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். கேரளாவின் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கரீஷ்மாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை கடந்த சனிக்கிழமை வழங்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. கரீஷ்மாவுக்கான தண்டனையை நீதிபதி இன்று அறிவிக்கிறார்.