காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களை விஜய் சந்திக்கும் கூட்டத்துக்கு இடம் தேர்வு செய்வதில் இருந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களிலிருந்து 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார். போராட்டக் குழுவினர் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு உள்ள விளையாட்டுத் திடலில் விஜய் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய காவல் துறையினரிடம் அனுமதி கோரினர்.
ஆனால் விஜய்யின் பாதுகாப்பை காரணம் காட்டி காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டது. போராட்டக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் கூட்டத்தை குறைக்கவும், ஏகனாபுரத்தில் இருந்து பொதுமக்களை 7 கி.மீ. வரவைக்கவும் திட்டமிட்டு காவல் துறையினர் இதுபோல் நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக போராட்டக் குழுவினர் திட்டமிட்டிருந்த அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடல் சேரும் சகதியுமாக மாறியது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலேயே விஜய் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்தனர். போலீஸார் அனுமதியுடன் அவர்கள் கூறிய திருமண மண்டபத்திலேயே விஜய் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர்.
திடலில் கூட்டம்: இருப்பினும் போராடிவரும் பொதுமக்கள் பலர் சேரும் சகதியுமாக உள்ள இடத்தை சரி செய்துவிடலாம் என்றும், அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யும்படியும் வலியுறுத்தினர். தவெக நிர்வாகிகள் மத்தியிலும் சுற்றியுள்ள 13 கிராமங்களிலிருந்து வரும் மக்கள் கூடுவதற்கு திடல்தான் சரியான இடம் என்ற கருத்தும் நிலவியது. இதனைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், காவல் துறை, போராட்டக் குழுவினர் கலந்து பேசினர்.
இறுதியாக போலீஸ் அனுமதி வழங்கியதை அடுத்து அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் விஜய்யின் சந்திப்புக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திடலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.