அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானியும் நிகழ்த்திய சந்திப்பு கவனம் பெறுகிறது. ட்ரம்புடன் அம்பானி தம்பதி எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபரின் பதவியேற்ப விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கம் இல்லை. ஆனால், இந்த முறை ட்ரம்ப் வெளிநாட்டு தலைவர்கள் சிலருக்கு, அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் தொழிலதிபர்கள் பலருக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ட்ரம்ப் வைத்த இரவு விருந்தில் பங்கேற்றனர்,
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா – அமெரிக்கா கூட்டுறவு இருநாடுகளுக்கும், உலகுக்கும் வளர்ச்சியைத் தரும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதாகக் கூறினர்.