"நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.." வலைப் பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி!

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை காரணமாக ஓராண்டுக்கு மேலாக சர்வேதச போட்டியில் விளையாடாத முகமது ஷமி மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியனஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

அதற்கு முன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெறும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ஒருநாள் தொடரிலும் முகமது ஷமி பங்கேற்க உள்ளார். 

இந்திய அணியுடன் இணைந்த ஷமி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் (ஜன.22) நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முகமது ஷமி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியுடன் இணைந்து வலைப் பயிற்சி மேற்கொண்டார். இது இந்திய ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிட்டு, “முகமது ஷமி வந்து விட்டார்” எனப் பதிவிட்டிருந்தது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக இந்திய வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது வருகையை உறுதி செய்துள்ளார். 

மேலும் படிங்க டென்னிஸ் வீராங்கனையை மணம் முடித்த நீரஜ் சோப்ரா! யார் அந்த ஹிமானி?

அர்ஜுனா விருது பெற்ற ஷமி 

இந்திய அணி 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் தான். பும்ராவின் கட்டுக்கடங்காத பந்து வீச்சுக்கு முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் வலுசேர்த்தனர். 

குறிப்பாக முகமது ஷமி உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 57 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். மொத்தமாக 24 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தினார். உலகக் கோப்பை போட்டியில் அவரது சிறப்பாகச் செயல்பாட்டை பாராட்டும் விதமாக அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விகீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விகீ).

மேலும் படிங்க: அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கும் டிரம்ப்.. முதல் நாள் கையெழுத்து என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.