IIT இயக்குநர் சர்ச்சை கருத்து: “கல்வி நிலையங்கள் காவி மயமாகுவதை…" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!

மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார்.

ஐஐடி காமகோடி

உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது. கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தனை தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமமோடி, பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும் என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

செல்வப் பெருந்தகை

மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்ததில் கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளது. இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளதை காமகோடி போன்றவர்கள் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது.

வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்து காமகோடி பேசியிருக்கிறார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில், அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

காங்கிரஸ் அறிக்கை

இத்தகைய பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர். இவர் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதால் இவரைப் போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல. எனவே, இத்தகைய கருத்துகளின் மூலம் கல்வி நிலையங்களை காவி மயமாக்குவதை அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.