கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்காக பாகிஸ்தானை தவிர்த்து அனைத்து நாடுகளும் தங்களது அணியில் விளையாடக்கூடிய வீரர்களின் பட்டியல் அறிவித்துவிட்டது.
அணி தேர்வில் இருந்த குழப்பங்கள்
மிகுந்த குழப்பத்தில் இருந்த இந்திய அணியும் நேற்று முன்தினம் அணியின் வீரர்கள் விவரத்தை அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையில் ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே,எல், ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி சிங், ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாட உள்ளனர்.
அணி தேர்வுக்கு முன்னர் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஆனால் அணி நிர்வாகமோ ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபியில் தேர்வான நிலையில், அவர் பொறுப்புடன் விளையாட வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ரிஷப் பொறுப்புடன் விளையாட வேண்டும்
இது தொடர்பாக பேசிய அவர், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளார். அவர் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏனெனில் இது ஒருநாள் (50 ஓவர்) போட்டி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் ரிஷப் பண்டிற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் விளையாடவில்லை என்றால் ரிஷப் பண்டிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது என நினைக்கிறேன். அவர் 4வது இடத்தில் இறங்கலாம். 40-50 ஓவர்களிம் வந்தால் இந்தியாவிற்கு சிறப்பான ஆட்டத்தை விளையாடி கொடுக்க முடியும் என தெரிவித்தார்.
ரிஷப் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி
27 வயதான ரிஷப் பண்ட் 2024ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடையாக விளையாடினார். அதில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இவர் 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 31 ஒருநாள் போட்டிகளில் 106.71 ஸ்டைக்ரேட் உடன் 871 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிங்க: “நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..” வலைப் பயிற்சியை தொடங்கிய முகமது ஷமி!