“இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கோட்லா சாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசும்போது ” பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, தற்போது நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அரசமைப்பு சட்டத்தின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு பேசியுள்ளது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்று பாஜக தலைவர்கள் நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் மோன்ஜித் சேத்தியா என்பவர் ராகுல் காந்தி மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 152 மற்றும் 197(1) பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.