கடைசி சர்வதேச போட்டியை மும்பையில் விளையாடியது ஏன்..? சச்சின் விளக்கம்

மும்பை,

மும்பையில் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதன் 50 ஆண்டுகால கொண்டாட்டம் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மும்பையைச் சேர்ந்த சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ரவிசாஸ்திரி, ரஹானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் தம்முடைய வாழ்நாளின் கடைசி சர்வதேச போட்டியை வான்கடே மைதானத்தில் விளையாடியது பற்றி சச்சின் நினைவு கூர்ந்தார். குறிப்பாக தாம் 24 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடியதை தமது அம்மா ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார். அதனாலேயே கடைசி போட்டியை கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தமது அம்மா பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பையில் நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பி.சி.சி.ஐ.யை தொடர்பு கொண்ட நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். ஒரு காரணத்திற்காக எனது கடைசி சர்வதேச போட்டி மும்பையில் நடைபெற விரும்பினேன். 24 வருடங்கள் இந்தியாவுக்காக விளையாடிய நான் மொத்தமாக 30 வருடங்கள் கிரிக்கெட்டில் விளையாடினேன். ஆனால் எனது அம்மா என் ஆட்டத்தை பார்த்ததில்லை.

எனது கடைசிப் போட்டியின் சமயத்தில் அம்மாவுக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் மும்பையை தவிர்த்து வேறு இடத்திற்கு அவரால் பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. அந்த கோரிக்கையை பி.சி.சி.ஐ. ஏற்றுக்கொண்டது. அப்போட்டியின் முதல் நாளில் பேட்டிங் செய்ய சென்றபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ரசிகர்களும் எனக்கு மரியாதையான வரவேற்பு கொடுத்தார்கள்.

அந்த உணர்ச்சியால் என்னுடைய கண்கள் கலங்கினாலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். கடைசி ஓவருக்கு முன்பாக பெரிய திரையை பார்த்தபோது அதில் எனது அம்மா தெரிந்தார். அதனால் கேமராமேன், ஒளிபரப்பு குழுவின் டைரக்டர் வெஸ்ட் இண்டீஸ் பாஸ்போர்ட் கொண்டவரா? என்று நான் சந்தேகப்பட்டேன். ஏனெனில் அம்மாவை காண்பித்து என்னுடைய உணர்ச்சிகளுடன் விளையாடிய அவர் வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.