இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான `சத்யா’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்த்த பிறகு ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் நீளமான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பதிவில் படத்தைப் பார்த்து அவர் கண்ணீர் விட்டு அழுதது குறித்துக் கூறியிருக்கிறார். கண்ணீர் படத்திற்காக மட்டுமல்ல, அதற்குப்பின் நடந்த விஷயங்களுக்கும் சேர்த்துதான் என்றும் கூறியுள்ளார்.
“ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எப்படிப்பட்ட குழந்தையை பெற்றெடுக்கிறேன் என்பதில் இல்லை. அது உணர்ச்சியிலிருந்து உருவான குழந்தையை பெற்றெடுப்பது போன்றது. சத்யா திரையிடல் முடிந்து ஹோட்டலுக்கு மீண்டும் வந்து என்னை சுயபரிசோதனை செய்து பார்த்தேன். அதில் நான் படத்தில் வரும் சோகத்திற்காக அழவில்லை. அப்போது என்னை நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன்.” என்றவர், “சத்யா திரைப்படத்தால் என்னை நம்பிய அனைவருக்கும் நான் செய்த துரோகத்தை எண்ணி குற்ற உணர்ச்சியில் அழுதேன்.
பல வாய்ப்புகளைத் தவறவிட்டதற்காகவும் அழுதேன். சத்யா மற்றும் ரங்கீலாவின் வெற்றி என்னை ஒரு விதத்தில் கண்மூடித்தனமாக்கியது. நான் குடிபோதையில் இருந்தேன். அது எனது சொந்த வெற்றி மற்றும் ஆணவத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. சத்யாவின் பிரகாசமான விளக்குகள் என்னைக் குருடாக்கியபோது நான் என் பார்வையை இழந்தேன்.” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பின் வந்த எனது சில படங்கள் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் சத்யாவில் இருக்கும் அதே நேர்மை வேறு எதிலும் இருப்பதாக நான் நம்பவில்லை. சினிமாவில் ஏதாவது ஒரு பாதையை உருவாக்கத் தூண்டிய எனது தனித்துவமான பார்வை, என்னைக் குருடாக்கியது. நான் ஏற்கெனவே செய்ததை இப்போது என்னால் சரி செய்ய முடியாது.
இனிமேல் நான் எடுக்கும் ஒவ்வொரு படமும் நான் இயக்குநராக முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற பயபக்தியுடன் உருவாக்கப்படும். சத்யா போன்ற ஒரு திரைப்படத்தை மீண்டும் என்னால் உருவாக்க முடியாமல் போகலாம். ஆனால் அதை செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பது சினிமாவிற்கு எதிராக நான் செய்யும் மன்னிக்க முடியாத குற்றம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY:
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…