சாம்பியன்ஸ் டிராபி: இந்திய தேர்வுக்குழு ஒரே தவறை மீண்டும் செய்கிறது – முன்னாள் வீரர் விமர்சனம்

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கழற்றி விடப்பட்டு அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கும் பேட்டிங் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். அதற்காக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது போன்ற முடிவுதான் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அதே தவறை மீண்டும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அனைவருமே பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மேலே வந்துள்ளது தெரிகிறது. ஏனெனில் 8-வது இடத்தில் விளையாடுபவர் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதனாலேயே நீங்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ளீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்கலாம். ஒருவேளை ஸ்பின்னர் தேவைப்பட்டால் வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்திருக்கலாம். தற்போதுள்ள 3 ஸ்பின் ஆல் ரவுண்டர்களில் இருவர் இடது கை பேட்ஸ்மேன்கள்.

இது நம்முடைய பேட்ஸ்மேன்கள் மீது நமக்கு கொஞ்சம் நம்பிக்கை இல்லாத தன்மையை காட்டுகிறது. அதனாலேயே நீங்கள் 8-வது இடத்தில் பேட்ஸ்மேன் இருப்பதை விரும்புகிறீர்கள். அதன் காரணமாகவே நீங்கள் பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். அதை நாம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் பார்த்தோம். தற்போது அந்த தவறை மீண்டும் செய்துள்ளீர்கள். இந்த யுக்தி சரியானது என்று நான் கருதவில்லை. ஏனெனில் முதலில் நீங்கள் உங்களுடைய பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கையை காட்ட வேண்டும். பவுலர்கள் என்பவர்கள் முதலில் விக்கெட்டுகள் எடுப்பதற்காக மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.