ராமேசுவரம்: புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்களால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கைவிடப்பட்டது. தொடர்ந்து, இந்திய நாட்டின் நிலப்பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் கடலில் ரயில் பாலமும், நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலம் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1911-ல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்து பணிகள் துவங்கப்பட்டன.
நூற்றாண்டை கடந்த பாம்பன் ரயில் பாலம்: இரண்டே ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்து, சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ரயில் பாலம் வழியாக 1914 பிப்ரவரி 24 அன்று முதன்முதலாக போட் ரயில் இயக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலும் பயணிகளால் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடிந்தது. மேலும், இந்த பாம்பன் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ரயில்வே மானியக் கோரிக்கைகளின் போது பாம்பன் புதிய ரயில் பாலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணிகளுக்காக 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடியால் காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து. புதிய பாலம் திறக்கப்பட்டு விரைவில் ராமேசுவரத்திற்கு மீண்டும் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பழைய பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலம் நூற்றாண்டு காலப் பழமையானது என்பதுடன், தற்போது அதன் உறுதித் தன்மை குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறையும் கப்பல்கள், பெரிய படகுகளுக்காக புதிய ரயில் பாலம் தூக்கப்படும் போதும் பழையப் பாலத்தை திறப்பதும் பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடலிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.20) பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்காக தூக்கி ஆய்வு செய்யப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு பக்கமும் பாலத்தை திறப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கமாக 15 நிமிடங்கள் மட்டுமே பாலத்தை உயர்த்த நேரம் எடுக்கும் சூழலில் 10 மாதங்கள் கழித்து இந்த தூக்குப் பாலம் தூக்கப்பட்டதால் அதற்கு ஒரு மணி நேரம் பணியாளர்களுக்கு தேவைப்பட்டது. மாலை 6 மணியளவில் பாலம் மீண்டும் இறக்கப்பட்டது.
நூற்றாண்டு பழமையான பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை அதன் மூல வரைபடத்தைக் கொண்டு பிரித்து (disassemble) அகற்றுவது மற்றும் பாம்பன் அல்லது மண்டபம் ரயில் நிலையம் அருகே காட்சிப்படுத்துவது தொடர்பாக பொது மக்கள், பயணிகளிடம் கருத்துக்களை கேட்பதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது.