பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிட்டது.
பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார் `டாஸ்க் பீஸ்ட்’ ரயான். `ஜம்ப் கட்ஸ்’ ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியிருக்கும் `Mr.ஹவுஸ்கீப்பிங்’ படத்தில் ரயனும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நேற்று முடிந்தப் பிறகு இன்று நடைபெற்ற இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ரயான்.
நம்மிடையே பேசிய ரயான், “ நேத்துதான் பிக் பாஸ் முடிஞ்சது. இந்தப் படத்துக்காக முதல்ல இயக்குநர் அருணை நான் சந்திக்கும்போது அவருக்கே பெருசா என்மேல நம்பிக்கை இல்ல. இந்தப் படத்துக்கு முன்னாடி பெரியதாக எந்த விஷயமும் நான் பண்ணல. என்னை நிரூபிக்கிறதுக்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கல. இந்தப் படத்துல நடிக்கும்போது தினந்தினம் பல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல நடிக்கும்போது லாஸ்லியாகிட்ட பிக் பாஸ் பற்றி பேசினேன். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு நானே பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனேன். யாருமே நினைச்சுப் பார்க்காத விஷயமாக அங்க இந்தப் படத்துக்காக ப்ரோமோஷனும் பண்ணினோம். எல்லோரும் ஒரு வாய்ப்புக்காகதான் காத்திருப்பாங்க. எனக்கான இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை சரியாக நான் பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன்.” என்றவர் பிக் பாஸ் தொடர்பாக பல விஷயங்களை எடுத்துரைக்க தொடங்கினார். ந
அவர், “ பிக் பாஸ் வீட்டுக்குள்ள சாப்பாடு கிடைக்கும். ஆனால், அதுக்குமே பெரிய டாஸ்க்குகள் இருக்கும். இப்போ வீட்டுக்குள்ள போயிட்டு வந்தவங்க பலரும் எடை குறைவாகியிருக்காங்க.” என்றார். `லாஸ்லியா பிக் பாஸ் போட்டிக்கு எதாவது டிப்ஸ் கொடுத்தாரா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ரயான், “ இல்ல, ஐடியாவே இல்ல. இந்தப் படம் நடக்கும்போது நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போவேன்னு தெரியாது. இந்தப் படம் முடிஞ்சதுக்குப் பிறகுதான் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சது. முத்துக்குமரன் நல்லா விளையாடினார். ஆரம்பத்துல இருந்தே அதே வலிமையான ப்ளேயராக இருந்ததுனால மக்களோட அன்பை அதிகமாக சேகரிச்சிட்டாரு. இது விளையாட்டாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துல நண்பர்களாகிடுவோம். அதை தவிர்க்கவே முடியாது. அதை தவிர்த்திருந்தால் ஆட்டம் நல்லா இருந்திருக்கலாம். நட்பு எங்க இருந்தாலும் உருவாகும். கோவா கேங் உண்மையாகதான் இருந்துச்சு!” எனக் கூறி முடித்துக் கொண்டார்.