பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பிளிங்க்இட் நிறுவனம் தற்காலிக கடைகளை திறந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து தினமும் பல லட்சக் கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், உடனடி வணிக சேவை நிறுவனமான பிளிங்க்இட், கும்பமேளா நடைபெறும் பகுதியில் தற்காலிக கடைகளை திறந்துள்ளது. கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ள இது உதவியாக உள்ளது.
இதுகுறித்து பிளிங்க்இட் தலைமைச் செயல் அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா எக்ஸ் வலைதளத்தில், “பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தற்காலிக கடைகளை திறந்துள்ளோம். தலா 100 சதுர அடியில் அமைந்துள்ள இந்த கடைகள், அரைல் டென்ட் சிட்டி, டோம் சிட்டி, ஐடிடிசி லக்சுரி கேம்ப், தேவ்ரக் மற்றும் சில முக்கிய இடங்களில் அமைந்துள்ளன” என பதிவிட்டுள்ளார்.
மேலும் “பூஜைக்கு தேவையான பொருட்கள், பால், தயிர், பழங்கள் மற்றும் காய்கறிகள், செல்போன் சார்ஜர்கள், பவர் வங்கிகள், துண்டுகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ய எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர். திரிவேண் சங்கமம் தண்ணீர் பாட்டிலும் எங்களிடம் உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. அத்துடன் ஏராளமானோர் இந்த நடவடிக்கையை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.