“உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று பதவியேற்றார்.

அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்குக்கு ட்ரம்ப் மாற்றினார்.

இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் (78) பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ட்ரம்பை தொடர்ந்து, துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். இந்த விழாவில் 600 விருந்தினர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் 20,000 பேர் பார்த்தனர்.

பதவியேற்ற பிறகு, அதிபர் ட்ரம்ப் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அடுத்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ள உள்ள திட்டங்களை அறிவித்தார். அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், துணை அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோரும் பங்கேற்றனர். அமெரிக்க தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் முகேஷ் அம்பானி உட்பட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில், ‘அழகான அமெரிக்கா’, ‘இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அமெரிக்கா’ போன்ற தேசபக்தி பாடல்களை பிரபல பாடகி கேரி அண்டர்வுட், பிரபல பாடகர் லீ கிரீன் வுட் ஆகியோர் பாடினர். பதவியேற்பு விழாவை தொடர்ந்து அதிபர், துணை அதிபர்களின் விருந்தினர்களுக்கு கேபிடல் கட்டிட அரங்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழு சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற ட்ரம்ப், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

உக்ரைன் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, வாஷிங்டனில் கேபிடல் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்களிடம் ட்ரம்ப் பேசியதாவது: பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க குடியேற்றத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், ஊடுருவலுக்கு முடிவு கட்டப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அமெரிக்கா சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். கடந்த 2021-ல் நடந்த கேபிடல் வளாக வன்முறை தொடர்பாக, தண்டனை விதிக்கப்பட்ட 1,500 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்படும். உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் போரை முடிவுக்கு கொண்டு வந்து, 3-ம் உலகப் போர் நடைபெறுவதை தடுப்பேன். இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.