India National Cricket Team: கிரிக்கெட் உலகமே தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. வரும் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் இந்த தொடங்கும் நிலையில், இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறவைடந்த பின்னர் 15 நாள்களாக முக்கிய வீரர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் 5 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அதே ஏறத்தாழ அதே வீரர்கள்தான் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. அதற்கு பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
2ஆம் கட்ட ரஞ்சி டிராபி தொடர்
பிப்ரவரி முதல் வாரம் வரை பும்ரா பந்துவீசக்கூடாது என்பதால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா இல்லையா என்பது அப்போதுதான் முடிவாகும் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். ஒருவேளை பும்ரா உடற்தகுதியை பெறவில்லை என்றால் அவருக்கு பதில் யார் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவார்கள் என்பதும் அப்போதுதான் முடிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இங்கிலாந்து தொடர் ஒருபுறம் இருக்க, ரஞ்சி கோப்பை தொடரின் (Ranji Trophy 2025) இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் ஜன. 23ஆம் தேதி தொடங்குகின்றன. சமீபத்தில் பிசிசிஐ கொண்டு வந்ததாக கூறப்படும் முக்கிய விதிகளில் ஒன்று, இந்திய வீரர்கள் கண்டிப்பாக உள்ளூர் தொடருக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் விளையாட வேண்டும். அதிகாரப்பூர்வமாக இந்த தகவல்கள் வராவிட்டாலும், வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ரஞ்சி டிராபியில் களம் காணும் முக்கிய வீரர்கள்
எனவே, இந்த 2ஆம் கட்டத்தில் சில போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். அந்த வகையில் ஜன.23ஆம் தேதி நடைபெறும் டெல்லி – சௌராஷ்டிரா அணிகளில், டெல்லி அணி சார்பில் ரிஷப் பண்டும், சௌராஷ்டிரா அணி சார்பில் ஜடேஜாவும் விளையாட உள்ளனர். ரோஹித், ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பை அணிக்காகவும், கில் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்க உள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபியில் விராட் கோலி…
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) மட்டும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பது மட்டும் உறுதியாகாமல் இருந்தது. விராட் கோலி டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், ஸ்குவாடுக்குள் வருவாரா என்ற கேள்வி இருந்தது. மேலும் அவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கு விராட் கோலி முடிவு செய்துள்ளார் என தெரிய வருகிறது.
அதாவது, ஜன.30ஆம் தேதி தொடங்கும் டெல்லி – ரயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் சரண்தீப் சிங் இதனை உறுதிசெய்துள்ளார். இதன்மூலம் விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது.
முக்கியத்துவம் பெறும் ரஞ்சி டிராபி தொடர்
ரஞ்சி டிராபியில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உள்பட 1,574 ரன்களை 51 சராசரியுடன் அடித்துள்ளார். விராட் கோலி கடைசியாக 2012ஆம் ஆண்டு உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். அந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 14 மற்றும் 42 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடர் (IND vs ENG ODI) பிப்.6ஆம் தேதியே தொடங்குகிறது. எனவே, அதற்கு முன் 4 நாள்கள் நடைபெறும் இந்த போட்டியில் விளையாட விராட் கோலி முடிவெடுத்துள்ளார். ஜூன் மாதத்தில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கு சரியான வீரர்களை தேர்வு செய்யவும் இந்த 2ஆம் கட்ட ரஞ்சி டிராபி போட்டிகள் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.