பிரயாக்ராஜ் மகா கும்பமேளா தீ விபத்தில் 40 குடிசைகள் 6 கூடாரங்கள் சேதமடைந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செக்டார் 19 பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் நேற்று முன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்களுடன் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
செக்டார் 19 பகுதியில் கீதா அச்சக முகாமில் உள்ள சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரிலிருந்து காஸ் கசிந்ததே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த குடிசைகள் மற்றும் கூடாரங்களுக்கும் தீ பரவி உள்ளது. இதையடுத்து 45 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் துறை துணை இயக்குநர் அமன் ஷர்மா தெரிவித்தார்.
மாநில போலீஸார், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடாரங்களில் தங்கியிருந்த சுமார் 25 பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் 40 குடிசைகள் மற்றும் 7 கூடாரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ பரவுவதற்கு முன்பு 3 காஸ் சிலிண்டர்கள் வெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட பின்னர், முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.