வாஷிங்டன்: அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடந்த டொனல்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில், இந்தியாவின் பிரதிநியாக சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் முன்வரிசையில் அமரவைக்கப்பட்டிருந்தது, இந்தியாவுடன் ட்ரம்ப் நிர்வாகம் நெருக்கமான உறவினை வைத்துக்கொள்ள விரும்புவதை தெளிவாகக் காட்டியது. ஜெய்சங்கர், ஈக்வடார் அதிபர் டேனியல் நோபாவுடன் நீண்ட முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இரண்டு வரிசைத் தள்ளி ஜப்பானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் அமர்ந்திருந்தனர். ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் QUAD-ல் அங்கம் வகிக்கின்றன. அமெரிக்காவும் இந்தியாவும் அதில் உள்ளன.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், “வாஷிங்டனில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்பு விழாவில் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தியது பெரிய கவுரமாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், டொனால்ட் ட்ரம்புக்குகான பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தினையும் ஜெய்சங்கர் கொண்டு சென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டது, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சிறப்பு தூதர்களை அனுப்பும் இந்தியாவின் நடைமுறையின் அங்கமே என்று தெரிவித்தனர்.
இதனிடையே, டொன்ல்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, “எனது அன்பு நண்பர் டொனால்ட் ட்ரம்புக்கு, அமெரிக்கவின் 47-வது அதிபராக நீங்கள் பதவியேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு எனது வாழ்த்துகள். நமது இரு நாடுகளின் நலனுக்காவும், உலகின் சிறப்பான எதிர்காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் நான் ஒன்றிணைத்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கிறேன். எதிர்கால வெற்றிகரமான பதவி காலத்துக்கு எனது வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்பின் முதல் பதவி காலத்தின் நினைவுகளையும் பகிர்ந்திருந்தார்.
முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெக்க தலைநகரில் சக வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். அதேபோல், புனித ஜான் தேவாலயத்தில் நடந்த பதவியேற்பு பிரார்த்தனையிலும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.