தமிழகத்தில் ஜவ்வாது மலை, கொல்லி மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, சித்தேரிமலை போன்ற மலைப்பகுதிகள், ஓமலூர், ஊத்தங்கரை போன்ற சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளே மலையாளிகள்.
சேலத்தை ஒட்டியுள்ள ஜவ்வாது மலையில் உள்ள 20 பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 242 கிராமங்களில் மலையாளிகள் வசிக்கிறார்கள். மலையாளி என்பதால், இவர்களுக்கும் கேரளத்தில் வசிப்போருக்கும் தொடர்பிருப்பதாக கருதவேண்டாம். ‘மலையை ஆள்பவர்கள்’ அல்லது ‘மலையில் வாழ்பவர்கள்’ என்ற பொருளையே ‘மலையாளி’ என்ற சொல் முன்னிறுத்துகிறது.
கேரள மலைகளிலும் இச்சமூக மக்கள் வாழ்கிறார்கள் என்பதைத்தவிர கேரள மலையாளிகளுக்கும் இந்த மக்களுக்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. ‘மலைக்கவுண்டர்கள்’ என்றும் ‘காராள வேளாளர்கள்’ என்றும் தங்களை இந்த மக்கள் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
கிழக்கே போளூர், மேற்கே ஆலங்காயம், வடக்கே வேலூர், தெற்கே செங்கம். இவைதான் ஜவ்வாது மலையின் எல்லை. தின்று கொழுத்த அரக்கன் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடக்கும் தோரணையிலான இந்தமலை, சந்தன மரங்களுக்குப் பெயர்போனது. ஒருகாலத்தில் உலகிலேயே அதிக சந்தன மரங்களைக் கொண்ட வனமாக இது அறியப்பட்டது. இப்போது சந்தன மரத்தின் சல்லி வேர்களைக் கூட காண இயலவில்லை. எல்லாவற்றையும் வெட்டி அழித்துவிட்டார்கள்.
செம்மரங்கள் இங்கே நிறைய உண்டு. நிறைய மூங்கில் மரங்கள் அடர்ந்திருப்பதால் இது யானைகளின் விருப்பத்துக்குரிய காடு.
பூச்சிக்கொல்லி தயாரிக்கப் பயன்படும் எட்டி என்ற மரத்தின் பட்டைகளை உரித்தெடுத்து கீழ்நாட்டில் இருந்து வரும் வியாபாரிகளிடம் விற்பது, தேன் எடுப்பது, பட்டுப்போன மரங்களை வெட்டி விற்பனை செய்வது, கம்பு, சோளம், திணை, சாமை, கொள்ளு, கேழ்வரகு போன்ற தானியங்களை விளைவிப்பது, மலைத்தேன் எடுப்பது ஆகியவை இவர்களின் முதன்மைத் தொழில்கள். வயதானவர்கள் காட்டில் விளைந்து கிடக்கும் சீத்தாக்காய், நெல்லிக்காய், பண்ணைக்கீரை, கடுக்காய் போன்றவைகளை சேகரித்து விற்கிறார்கள்.
கட்டுப்பாடு மிகுந்த இம்மக்களின் சமூக அமைப்பு வலுவானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவரை ‘ஊரான்’ என்கிறார்கள். ஊரானுக்குக் கீழே கங்காணி இருப்பார். ஊரானின் உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப்பு அவருடையது. கங்காணிக்கு அடுத்த நிலையில் ஊரின் கோயில் பணிகள், மந்திரக்கட்டுக்கள், பூஜைகளை மேற்கொள்ள மூப்பன் என்பவர் நியமிக்கப்படுகிறார். ஊர் தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உத்தேறி உண்டு. இதுதான் கிராமத்து நிர்வாகக்குழு.
ஊரில் நடக்கும் பிரச்னைகளை ஊரானே தீர்த்து வைப்பார். ஊரார் இவரது பேச்சுக்கு முழுமையாக கட்டுப்படுகிறார்கள்.
இவை தவிர 12 கிராமங்களுக்கு 1 நாட்டார் தேர்வு செய்யப்படுவார். அவர்களை ‘சிற்றரச நாட்டார்’ என்கிறார்கள். ஊரில் ஏற்படும் பிரச்னைகளை ஊரான் தீர்த்து வைக்க, இரண்டு ஊர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை இந்த சிற்றரச நாட்டார்கள் தீர்த்து வைப்பார்கள். நாட்டார்களின் உதவியாளர் காரியக்காரர். இவர், நாட்டாரின் செய்தியை அல்லது உத்தரவை ஊரான்களிடம் கொண்டு செல்லும் பணியைச் செய்வார். இவர்களுக்கு மேலே, அதிகாரம் கொண்டவராக பட்டக்காரர் இருப்பார். இவர்தான் அரசர். இவர் சொல்வதுதான் வேதவாக்கு. இவர் எடுப்பதுதான் இறுதி முடிவு. ஊரான்கள், சிற்றரசர்களால் தீர்க்கமுடியாத பிரச்னைகளை பட்டக்காரரிடம் கொண்டு வருவார்கள்.
அரசுப்பதிவேடுகளின்படி தமிழகத்தில் 3,10,042 மலையாளி பழங்குடிகள் வசிக்கிறார்கள். தமிழகப் பழங்குடி மக்களின் மக்கள்தொகையில் இது 48 சதவிகிதம். தமிழகத்தில் அதிகம் வாழும் பழங்குடிகள் மலையாளிகள்தான். மொத்தப் பழங்குடி மக்களின் எண்ணிக்கையில் மலையாளிகளின் எண்ணிக்கை சரிபாதியாக இருக்கிறது. ஜவ்வாது மலை தவிர ஏலகிரி மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, வாச்சாத்திமலை, ஜல்லூத்து மலை, கோதுமலை, கஞ்சமலை, நகரமலை, கடகமலை, பச்சைமலை, பாலமலை, கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகளில் சிற்சிற பண்பாட்டு வேறுபாடுகளுடன் மலையாளிகள் அதிகளவில் வாழ்கின்றனர்.
மலையாளிகளின் தொன்மம், பூர்விகம் குறித்து வெவ்வேறு கருத்துகளை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். காஞ்சிபுரம் சமவெளிப்பகுதியில் வாழ்ந்து நெருக்கடியான ஒரு சூழலில் மலைக்கு இடப்பெயர்ந்த ஒரு பூர்விகக்குடி என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.
எட்கர் தர்ஸ்டனும் ‘மலையாளிகள், 15-ஆம் நூற்றாண்டில் போர் முதலிய காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த வேளாளர்கள்’ என்று பதிவு செய்கிறார்.
“இந்தியாவின் தெற்கு பகுதியில் முகமதியர்கள் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஒரு சமூகம் இடம்பெயர நேரிட்டது. அச்சமூகத்தின் வழிகாட்டிகளாக மூன்று பேர் இருந்தார்கள். ஒருவர் சேர்வராயன் மலையிலும் மற்றொருவர் கொல்லிமலையிலும், மூன்றாமவர் பச்சைமலையிலும் குடியேறினார்கள்” என்று மலையாளிகளைப் பற்றி ஒரு தொன்மப் பதிவு உள்ளது.
தமிழ் லெக்சிகனும் இதை ஆவணப்படுத்துகிறது. முகமதியர் தெற்குநோக்கி வந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து சேர்வராயன் மலையில் குடியேறியவர்கள் என்பது லெக்சிகனின் பதிவு.
மலையாளிகள் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே வசிக்கிறார்கள். பெண்கள் ஆண்களுக்கு சமமாக உரிமை பெறுகிறார்கள். குறிப்பாக கணவர் இறந்துவிட்டால் மனைவி முறைப்படி வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணத்தின்போது ஆண், பெண்ணின் பெற்றோருக்குப் பரிசப்பணம் தரவேண்டும்.
தங்கள் சமூகத்துக்குள்ளேயே நடக்கும் காதல் திருமணங்களை அங்கீகரிக்கும் மலையாளிகள், பிற சமூக பெண் அல்லது ஆணை காதலிப்பவர்களை இறப்புச் சடங்கு நடத்தி ஊரைவிட்டு தள்ளி வைப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் ஊருக்குள்ளேயே நுழையமுடியாது. மலையாளிகள் முறையான குடும்ப அமைப்பு முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். குலதெய்வத்தின் அடிப்படையில் 12 குலங்கள் உண்டு. சில குலங்கள் சகோதர பந்தம். சில குலங்களுக்குள் மட்டுமே திருமண பந்தம் வைத்துக்கொள்ளலாம். ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் பெண் கொடுத்து, பெண் எடுப்பதில்லை. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு குல தெய்வம் உண்டு.
1. பூசிக்கண்ணான்
2. நாட்டான்
3. பில்லாங்காட்டான்
4. வாசான்
5. கருப்புக்குள்ளான்
6. தாதரியான்
7. சோலவுட்டான்
8.மதிக்கெட்டான்
9. கொத்திவுட்டான்
10.பாலவெள்ளையன்
11. கோல்காரவுட்டான்
12. கோமாளிவுட்டான்
ஆகியவை மலையாளிகள் சமூகத்தின் குலங்கள்.
இந்தக் குலப்பிரிவினை ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு மாதிரியிருக்கின்றன. பச்சை மலையாளிகள் 50 குலங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். சித்தூர் வட்டாரத்தில் வசிக்கும் மலையாளிகள் ஏழு குலங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாளிகள் திருமணச் சடங்கு வரைமுறையானது. திருமண நிச்சயதார்த்தை பெரிதாக நடத்துகிறார்கள். பெண்ணின் வீட்டிலேயே இந்த நிகழ்வு நடக்கும். இதில் மணமகன் பங்கேற்கமாட்டார். மாலை நேரம், மணமகன் தரப்பிலிருந்து 10 ஆண்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். அவர்கள் அனைவரும் வேட்டி, சட்டையோடு வெள்ளைத் துணியாலான தலைப்பாகையும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது மரபு. தலையில் ஒரு முடி கூட தெரியாத அளவுக்கு தலைப்பாகை அமைய வேண்டும். தலைமுடி தெரிந்தால் அது கெட்ட சகுனம் என்பது இவர்களின் நம்பிக்கை.
பெண் வீட்டுக்குச் செல்லும் மணமகன் தரப்பினரை பெண்வீட்டார் பாய்போட்டு அமர வைக்கவேண்டும். அமர்ந்ததும், ‘குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடம்மா’ என்று கேட்பார்கள். மணமகள் தண்ணீர் கொண்டு வர வேண்டும். பெண்ணை அனைவரும் நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். பார்த்தது திருப்தியாக இல்லையென்றால் மீண்டும் ஒருமுறை ‘இன்னும் கொஞ்சம் தண்ணி கொடம்மா’ என்பார்கள். பெண் பார்த்து முடிந்ததும் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை இரவு உணவுக்கு அழைப்பார்கள். அவர்கள் உணவை நிராகரித்தால், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று புரிந்துகொள்ள வேண்டும். இரவு உணவு சாப்பிட்டால் பெண் பிடித்திருக்கிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மணமகளுக்கான பரிசப்பணம் பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும். இதற்கும் தலைப்பாகை அணிந்தபடி மணமகன் தரப்பினர் பெண் வீட்டுக்குச் செல்வார்கள்.
பெண்ணுக்கான பரிசப்பணமாக பணம், தானியங்கள், பன்றிகள் வழங்கப்படும். பரிசப்பணம் தீர்மானிக்கப்பட்டதும் அதேநாளில் திருமணத்துக்கான தேதியையும் குறித்துவிடுவார்கள். பெரும்பாலும் வியாழக்கிழமை மட்டுமே இவர்களின் திருமணம் நடக்கும். ராமருக்கும் சீதாவுக்கும் வியாழக்கிழமையே திருமணம் நடந்ததாகவும் அதனால் நாங்களும் வியாழக்கிழமையை நன்னாளாகக் கருதி திருமணங்கள் நடத்துவதாகவும் சொல்கிறார் வண்ணாடு பகுதியைச் சேர்ந்த ஒரு மூப்பன்.
மணமகளுக்கு தீர்மானிக்கப்பட்ட பரிசப்பணத்தின் ஒரு பகுதி திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பாகவே பெண் வீட்டுக்கு சென்றுவிடவேண்டும். மணமகன் குடும்பத்தின் பொருளாதார நிலை, பெண்ணின் அழகைப் பொறுத்து பரிசப்பணத்தின் அளவு அமையும். மணமகன் குடும்பத்தாரால் பரிசப்பணம் தரமுடியாத சூழலில் பெரிய நாட்டார் தருவார். அந்தப்பணத்தை தவணையாக மாப்பிள்ளை விட்டார் பெரிய நாட்டாருக்குத் தந்துவிட வேண்டும்.
இன்று மணமகளுக்கு மணமகன் பரிசம் தரும் பழக்கம் சிறிது சிறிதாக மருவி பிற சமூகங்களைப் போல பெண்கள் ஆண்களுக்கு வரதட்சணை தரும் பழக்கம் பரவி வருவதைக் குறிப்பிட்டாக வேண்டும். அக்காலத்தில் பச்சை மலையாளிகள் நான்கு கண்டகம் தானியமும் நான்கு பகோடா பணமும் கன்றோடு ஒரு பசுவும் பெண்ணுக்குப் பரிசமாக அளித்திருக்கிறார்கள்.
திருமணம் பெரும்பாலும் மணமகன் கிராமத்திலேயே நடக்கிறது. மூங்கிலால் கட்டப்பட்ட பந்தலில் திருமணம் நடக்கும். திருமணத்துக்கு முன்பாக மீதமிருக்கும் பரிசப்பணத்தை பெண்ணுக்கு வழங்கியாக வேண்டும். வழங்காவிட்டால் திருமணம் நடக்காது. பரிசப்பணம் ஒரு துணியில் கட்டப்பட்டு பெண்ணின் அம்மாவிடம் வழங்கப்படும். பரிசப்பணத்தில் நாணயங்கள் இருக்கவேண்டும். பெரிய நாட்டார், ஊரான்கள் முன்னிலையில் அந்தத்துணி மூட்டையைப் பெண்ணின் அம்மா பிரித்து உதறுவார். அப்போது சில்லறைகள் சிதறி விழவேண்டும். சில்லறைகள் சிதறும் சத்தம் மணமக்கள் வளமாக வாழ நல்ல சமிஞ்ஞை என்று நம்பப்படுகிறது.
திருமணம் நள்ளிரவில் தான் நடக்கும். உரலை தலைகீழாகப் போட்டு மணமக்கள் மூங்கில் பந்தலில் அமருவார்கள். அவர்களுக்கு முன்னால் அரசமரத்தின் கிளையும் மூங்கிலின் கிளையும் நடப்பட்டிருக்கும். அரசமரம் ஆணையும் மூங்கில் பெண்ணையும் குறிக்கும். இந்தக் கிளைகளை தம்பதிகள் வீ்ட்டில் பாதுகாக்கிறார்கள்.
தலைமை நாட்டார் இரண்டு மாலைகளை எடுத்து, மணமக்கள் கையில் தருவார். அதை அணிவித்தபின் தாலியை மணமகளின் கழுத்தில் வைப்பார். பின்னால் நின்றுகொண்டிருக்கும் ஊர்க்கவுண்டர் தாலியைக் கட்டுவார். இப்போது இந்த வழக்கம் சிறிது சிறிதாக மாறிவருகிறது. மணமகனே தாலியைக் கட்டுகிறார் . பிறகு மணமகனின் கையைப் பிடித்து பெண்ணின் கையில் வைத்து ஊர்க்கவுண்டர் தாரை வார்த்துத்தருவார்.
தாலியில் பெரும்பாலும் குலதெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
மஞ்சள் நூல் அல்லது சங்கிலியில் தாலி கோர்க்கப்பட்டிருக்கும். தாலி கட்டுவதற்கு முன்பாக ‘கட்டுன மாங்கலியம் காமச்சியம்மாள் மாங்கலியம்” என்று மூன்று முறை மாப்பிள்ளை கூறவேண்டும். பெண் ‘வேடன் பொண்டாட்டி இனி காராளன் பொண்டாட்டி’ என்று உரக்கச் சொல்ல வேண்டும்.
திருமணம் முடிந்ததும் விருந்து நடக்கும். பெரும்பாலும் பன்றிக்கறி விருந்து. இப்போது ஆடு, கோழி சமைக்கிறார்கள். அதன்பின் பெரியவர்கள் ஒருவர் பின் ஒருவராக தம்பதியிடம் சில வார்த்தைகளைச் சொல்லி ஆசிர்வதிப்பார்கள். பெண்கள் மணமக்களை வாழ்த்தியும் தங்கள் குலப்பெருமையை காக்குமாறு வலியுறுத்தியும் பாடல் பாடுவார்கள். இறுதியாக ஒரு கர்ப்பிணிப்பெண் மணமக்களை வாழ்த்துவார். மணப்பெண் குழந்தைப்பேறு பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த நடைமுறை.
அதன்பிறகு இரவு முழுவதும் கூத்து நடக்கும். நல்லொழுக்கமுள்ள பெண்களைப்பற்றிய கதைகளை நாடமாக்கி நடிப்பார்கள். உள்ளூர் மக்களே பாத்திரங்கள் ஏற்பார்கள். வெளியூர் உறவினர்களும் கூத்தில் பங்கேற்பார்கள். பெரும்பாலும் இந்த நாடகங்களில் ஆண்கள் மட்டுமே நடிப்பார்கள். மறுநாள் காலையில் கூத்துக்கலைஞர்களுக்கு புத்தாடைகள், பரிசுப்பணம் தந்து மரியாதை செலுத்துவார்கள். புதுமணத் தம்பதிகள் மேளதாளம் முழங்க கிராமத்தைச் சுற்றி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மணமகள் அருகிலிருக்கும் ஆற்றுக்குச் சென்று அரிசி, சில்லரைக் காசுகளைப் போட்டுவிட்டு குடத்தில் தண்ணீர் கொண்டுவருவார். பிறகு பெண்ணும் பையனும் மணமகள் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு அவரவர் பணியைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
திருமணம் செய்துவைக்கும் பட்டக்காரர், ஊர்க்கவுண்டர்கள், ஊரான் உள்ளிட்டவர்களுக்கு மணமகள் தரப்பில் கட்டணம் தரவேண்டும். ஒருவேளை தரப் பணமில்லை என்றால் பட்டக்காரர் அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். ஆனால், தவணை முறையில் அந்தக்கடனை அடைத்துவிட வேண்டும். பெற்றோரால் அடைக்கமுடியாமல் பிற்காலத்தில் பிள்ளைகள் அடைக்க நேர்ந்ததெல்லாம் உண்டு.
பெண் கருவுற்றால் அதன்பிறகு வீட்டில் எந்த வித சடங்குகளையும் செய்வதில்லை. பெண்ணின் முதல் பிரசவம் பிற சமூகங்களைப் போல தாய் வீட்டில் தான் நடைபெறும். அண்மைக்காலம் வரைக்கும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளும் நடைமுறைதான் இருந்தது. குழந்தை பேற்றின்போது வலி ஏற்படாமல் இருக்கவும் சுகப் பிரசவம் நடக்கவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மந்திரம் கூறி வயிற்றில் எண்ணெய் தடவுவார். குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் தீட்டுக்கழித்து பெயர் சூட்டுவார்கள். முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மாதி என்ற பெயரும் ஆண் குழந்தையாக இருந்தால் ‘ராமன்’ என்ற பெயரும் வைப்பது மலையாளிகளின் மரபாக இருக்கிறது.!