கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி: டெல்லி தேர்தலில் பாஜக புதிய வாக்குறுதி

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி (கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி (போஸ்ட் கிராஜுவேட்) வரை இலவசக் கல்வி வழங்குவோம் என்று பாஜக புதிய வாக்குறுதி வெளியிட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்ட பாஜக, அதன் இரண்டாம் பகுதியை இன்று வெளியிட்டது. பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அதனை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர், “பாஜக தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை வெளியிட்ட ஜகத் பிரகாஷ் நட்டா, 2025-ம் ஆண்டுக்கான வளர்ந்த டெல்லிக்கான பாஜகவின் தீர்மானம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். இன்று அதன் இரண்டாம் பகுதி வெளியிடப்படுகிறது.

பாஜக ஆட்சியில் இருக்கும் இடங்களிலெல்லாம், பொது நலனே அதன் முன்னுரிமையாகவும், மையப் புள்ளியாகவும் இருந்து வருகிறது. மத்திய அரசிலும், மாநிலங்களின் ஒத்துழைப்புடன், மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வசதிகளையும் வழங்கினோம். டெல்லியில் எங்கள் அரசாங்கம் அமைந்தவுடன், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், நீர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம். டெல்லி மக்களுக்கு இன்று சிறப்பான நாளாகவும், நாளை இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாகவும் இருக்க முயற்சிப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு இடைத்தரகர்களை ஒழித்துள்ளது. ஊழல் விஷயத்தில் மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றி வருகிறது. ஏழை மாணவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் கே.ஜி முதல் பி.ஜி வரை இலவசக் கல்வி வழங்கப்படும். மேலும், எங்கள் அரசாங்கம் அமைந்தவுடன், டெல்லி இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ரூ.15,000 நிதி உதவி வழங்குவோம். அதோடு, இரண்டு முறை பயணக் கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை திருப்பிச் செலுத்துவோம்.

நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை கற்பனை செய்யும்போது, ​​வளர்ந்த டெல்லி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்லியை வளர்ச்சியடையச் செய்வதே எங்கள் நோக்கம். இதற்கான சாதனை பயணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நாம் நிறைவு செய்வோம்” என தெரிவித்தார்.

கடந்த 17-ம் தேதி தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை ஜெ.பி. நட்டா வெளியிட்டார். அப்போது அவர், “பெண்களின் செழிப்புக்கான திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், எல்பிஜி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ஏழை எளிய மக்களுக்காக ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும் என்றும் நட்டா கூறினார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 8-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலை முன்னிட்டு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை இரண்டு கட்டங்களாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.