டங்ஸ்டன் திட்டத்தை கைவிட கோரி டெல்லியில் மத்திய அமைச்சரிடம் நாளை 11 பேர் குழு நேரில் மனு

மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரி மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த மதுரையிலிருந்து 11 பேர் குழு இன்று டெல்லி சென்றுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி மேலூர் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் அரிட்டாபட்டிக்கு நேரில் சென்று போராட்டக்குழுவிடம் பேசி டங்ஸ்டன் சுரங்கம் வராது என உறுதியளித்தனர்.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வாகனங்களிலும், நடந்தும் மதுரைக்கு பேரணியாக வந்து தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டக் குழுவை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் வராது. மத்திய கனிமவளத் துறை அமைச்சர் கிஷன்ரெட்டி சென்னை வரும்போது போராட்டக்குழு நிர்வாகிகளை நேரில் சந்திக்க வைப்பதாகவும், அப்போது திட்டம் கைவிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

இருப்பினும் மத்திய அரசு அதிகாரபூர்வமாக டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்த பிறகே போராட்டம் கைவிடப்படும் என போராட்டக்குழு அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி டெல்லியில் சந்திக்க வைக்க டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்திக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக பாஜக பொதுச் செயலாள் ராம சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், பாஜக நிர்வாகி பாலமுருகன் ஆகியோர் மேலூர் பகுதியைச் சேர்ந்த மகாமுனி அம்பலம், வி.ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, எஸ்.ஆனந்த் ஆகியோருடன் மதுரையிலிருந்து இன்று விமானத்தில் டெல்லி சென்றனர். இக்குழு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி நாளை சந்தித்து பேசுகிறது.

அப்போது டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படும் என மத்திய அமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லிக்கு மத்திய அமைச்சரை டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டக் குழு நிர்வாகிகளை அழைக்காமல், விவசாயிகளை பாஜக குழு அழைத்துச் சென்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அரிட்டாபட்டியைச் சேர்ந்த முல்லை பெரியாறு பாசன விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிவகுமார் கூறுகையில், பாஜக குழுவுடன் டெல்லி சென்றிருப்பவர்கள் விவசாய சங்க பிரநிதிகள். டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவில் இடம் பெற்றவர்கள் அல்ல. இருப்பினும் அவர்களின் சந்திப்பால் கோரிக்கை வெற்றியடைந்தால் மகிழ்ச்சியே. இல்லாவிட்டால் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் தொடரும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.