வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்றது. இதில், ஜோ பைடன் வெற்றிபெற்றார். தேர்தலில் அப்போது ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். அதேவேளை, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஆதரவாளர்கள் தனக்கு உறுதுணையாக இருக்கும்படி டிரம்ப் கூறினார்.
இதையடுத்து, 2021 ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற அலுவலகங்கள், அறைகளை சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக 1,500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சிலர் சிறைகளில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார். பதவியேற்ற உடன் 2021ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 1,500 க்கும் மேற்பட்டோருக்கும் டொனால்டு டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்தார். இதையடுத்து, சிறைகளில் உள்ளவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.