புதுச்சேரி: புதுச்சேரியில் தொடங்கிய தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஸ்மார்ட் ஹெல்மெட், குறைந்த விலை வெண்ட்டிலேட்டர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம் என மாணவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா, கேரளம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த இடைநிலை மற்றும் உயர்நிலைப் பிரிவுகளில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தனிப் பிரிவில் 80 படைப்புகளும், குழுப்பிரிவில் 52 படைப்புகளும், ஆசிரியர் பிரிவில் 58 படைப்புகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஹெல்மெட், குறைந்த விலை வெண்ட்டிலேட்டர், கைசெயலிழப்பு சிகிச்சைக்கு ரோபோ, தூரத்திலிருந்து கழிவறையை சுத்தப்படுத்தும் கருவி, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் பேருந்து நிறுத்தம், ரயில் விபத்து தடுப்பு கருவி, நிலச்சரிவை முன்கூட்டியே கண்டறியும் கருவி, இயற்கை விவசாயம் மற்றும் சூரிய ஒளி மின்சார கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.