பெலகாவி: மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து என்றும், காங்கிரஸ் கட்சி காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் கட்சி நம்புகிறது என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவின் பெலகாவியில் மகாத்மா காந்தியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பேசிய சித்தராமையா, “காந்தியை ‘இந்து விரோதி’ என்று பாஜக சித்தரிக்கிறது. இது 100 சதவீதம் பொய். மகாத்மா காந்தி தொடர்ந்து ராமரைப் பிரார்த்தித்தார். நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்ட தருணத்திலும் கூட, அவரது கடைசி வார்த்தைகள் ‘ஹே ராம்’ என்பதாகத்தான் இருந்தது. இது அவரது பக்தியையும், அவர் பின்பற்றிய இந்து மதத்தையும் பிரதிபலிக்கவில்லை என்றால், வேறு எதை பிரதிபலிக்கிறது?
இந்து மதம் பற்றிய காந்தியின் பார்வை ஒருபோதும் எவரையும் தள்ளிவைப்பதாக இருக்கவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக இணைந்து வாழ காந்தி விரும்பினார். அவரது இந்துத்துவா அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் சீர்திருத்தத்தால் வரையறுக்கப்பட்டது. பாஜகவால் பரப்பப்படும் இந்துத்துவா பிளவுபடுத்தக்கூடியது. மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.
காந்தியின் கொள்கைகளை பாஜக திட்டமிட்டு குறைமதிப்புக்கு உட்படுத்தி வருகிறது. அக்கட்சி, நமது அரசியலமைப்பையும் பலவீனப்படுத்த முயல்கிறது. ஆனால், அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் உள்ளது. நாம் அரசியலமைப்பைப் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “காந்தியின் செல்வாக்கு, இந்தியாவுக்கு தார்மிக திசைகாட்டியாக விளங்குகிறது. அரசியலமைப்பு இல்லாவிட்டால், அராஜகம் இருந்திருக்கும். காந்தியின் தியாகங்கள், அவரது கொள்கைகள் மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி எப்போதும் போலவே இன்றும் பொருத்தமானவை” என்று குறிப்பிட்டார். காந்தியின் இந்துத்துவாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறுவதன் மூலம், இந்து மதம் பற்றிய விவாதத்தை அக்கட்சி மீண்டும் எழுப்புவது போல் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.