விழுப்புரம்: “கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ‘கள் விடுதலை மாநாடு’ அந்த இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தலைமையில் இன்று (ஜன.21) நடைபெற்றது. இதில், பாஜக துணைத் தலைவர் ஏஜி சம்பத், வேட்டவலம் மணிகண்டன், பனையேறி பாதுகாப்பு இயத்தத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டின் தொடக்கமாக பெண்கள் கள் பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமக எடுத்து வர மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர்.
தொடர்ந்து பனையேறி ஒருவர் பனைமரத்தில் ஏறி கள் இறக்க, பனைமரத்துக்கு கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கள் நன்மையை விளக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “கள் மது வகையில் வராது. அது நம் உணவு. கள்ளை மதுவென்று நிருபித்தால் ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்து வாதிட்டார்கள். கள் விடுதலை போராட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சி துணை நின்று போராடி வருகிறது. மதுவை போதுமென்று சொல்லாமல் அருந்தி மயங்குவார்கள். ஆனால் உணவை மட்டுமே மனிதன் போதுமென்று சொல்வான். அது போலத்தான் கள்ளை போதுமென்று மனிதன் சொல்வான்.
ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். கள் என்று சொல்லாமல் அதை பனஞ்சாறு என்றும் மூலிகைச்சாறு என்று சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை? கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன? என கேள்வி எழுகிறது. எந்த மாநில முதல்வருக்கும் சாராய தொழிற்சாலை கிடையாது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டசபையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை என பேசுகிறார்கள்.
பொங்கல் பண்டிகையின்போது இரண்டு நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனை கோடியில் குடிப்பவனுக்கு ஏன் இலவசம்? டாஸ்மாக் வைத்துக் கொண்டு, இளைஞர் நலன், மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத் துறை வைத்திருப்பது வேடிக்கையானது. பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாடு உள்ளது. எத்தனை புயல் வந்தாலும் பனை மரம் சாயாது. மண் அரிப்பை தடுக்க மரம் நடவேண்டும். சிமெண்ட் பூசுவதில்லை. ஒரே நாளில் நூறு வழக்கு வாங்கியவன் இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டுமே. எந்த அதிகாரமும் நிரந்தமில்லை. கள் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி எல்லா வகையிலும் துனை நிற்கும்,” என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும், “ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் கூட்டணி கட்சிகள் இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்?
பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெண்களுக்கு தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எரியவேண்டும். கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம், பெண்கள் கருப்பையை அறுத்து எரிய வேண்டும், மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக் கூடாது என்று கூறுவதற்கு ஒப்பானது என்று பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன்.
பெரியாரை எதிர்ப்பது மதவாதத்துக்கு ஆதரவாக உள்ளது என கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்? மாட்டு பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக் கறி உண்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி இதுதான் இந்த நாட்டில் உள்ள கட்டமைப்பு. இதிலிருந்து தப்பிக்க அரசியல் புரட்சி மட்டுமே ஒரே வழி. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான்,” என்று அவர் பேசினார்.