திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது ரூ.6.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வு பயணத்தை முதல்வர் மேற்கொள்ள இருக்கிறார்.
இதையொட்டி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில், சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ரூ.78 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட்டில் சோலார் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். பாளையங்கோட்டையில் மார்க்கெட் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே மைதானத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் நெல்லைக்கு வருவதையொட்டி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். பாளையங்கோட்டையில் விழா நடைபெறும் பகுதியை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழக முதல்வர் வரும் 6-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரவுள்ளார். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஏழைகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கவும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், திமுகவினரை சந்திக்கவும் வரவுள்ளார். அன்று காலை 11.20 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் முதல்வர், அங்கிருந்து திருநெல்வேலிக்கு வருகிறார்.
திருநெல்வேலியில் கங்கைகொண்டான் சிப்காட்டில் சோலார் பவர் நிறுவனத்தை தொடங்கி வைத்துவிட்டு, உணவு பதப்படுத்தும் கூடத்தை திறந்து வைக்கிறார். மாலையில் திமுகவினரை தோழர்களை சந்திக்கிறார். அத்துடன் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். அடுத்த நாள் 7-ம் தேதி காலையில் வெள்ளாங்குழியில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு விவசாயிகளை சந்தித்து பேசிவிட்டு, பாளையங்கோட்டையில் விழா நடைபெறும் மைதானத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தமாக 2 நாட்களிலும் மாவட்டத்தில் ரூ.6.18 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் மூடியிருக்கும் வணிக வளாக கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், வாடகையை குறைத்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.