துருக்கியின் போலு மலையில் அமைந்துள்ள கிராண்ட் கர்தால் நட்சத்திர ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹோட்டலில் இருந்த எச்சரிக்கை அலாரம் செயல்படாததால் தீ அதிகளவில் பரவும் வரை அங்கிருந்தவர்களுக்கு அது குறித்து தெரியவில்லை.
கடும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படவே அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பலரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர். 12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டலில் மொத்தம் 234 பேர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தீயிலிருந்து தப்பிக்க பலரும் ஜன்னல் வழியாக கீழே குதித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பலரும் பெட்ஷீட்களை பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழே இறங்கியுள்ளனர். இந்த தீவிபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இருவர் பயத்தில் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்துள்ளனர். கடுமையான புகை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலு கவர்னர் அப்துல் அஜிஸ் அய்தின் தெரிவித்துள்ளார்.
இதுவரை மீட்கப்பட்ட 51 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா, இது தேசத்திற்கு ஆழ்ந்த வலிமிகுந்த தருணம் என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இது விடுமுறைக் காலம் என்பதால் அனைத்து நட்சத்திர விடுதிகளும் சுற்றுலா பயணிகளால் நிரம்பியுள்ளன. இந்த தீவிபத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள விடுதிகளில் உள்ள பயணிகள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.