ராணுவ அதிகாரியை திருமணம் செய்வதற்காக 2 ஆண்டுகளாக காதலித்த காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கிரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக பழகி வந்ததனர். இந்நிலையில் கிரீஸ்மாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஆனால் கிரீஸ்மாவுடனான காதலை துண்டிக்க ஷரோன் ராஜ் மறுத்துவிட்டார். இதனால் ஷரோன் ராஜை கொலை செய்ய கிரீஸ்மா முடிவு செய்தார். பாரசெட்டமால் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து ஷரோன் ராஜக்கு கொடுத்தார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்தார் கரீஸ்மா. பாராகுவாட் என்ற களைக்கொல்லி மருந்தை ஆயூர்வேத பானத்துடன் கலந்து ஷரோன் ராஜ்க்கு கிரீஸ்மா கொடுத்தார். அதை குடித்த ஷரோன் ராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் அவரது உடல் பாகங்கள் செயல் இழந்து ஷரோன் ராஜ் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கிரீஸ்மா மீது புகார் அளித்தது. விசாரணையில் கிரீஸ்மா விஷம் கொடுத்தது உறுதியானது. ஆதாரங்களை அழிக்க கிரீஸ்மாவின் மாமா நிர்மல் குமரன் நாயர் உதவியுள்ளார். மகளின் இந்த செயலுக்கு கிரீஸ்மாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால், இவர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓராண்டு சிறையில் இருந்த கிரீஸ்மா ஜாமினில் வெளியேவந்தார். கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கிரீஸ்மா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இளம் வயது பெண், முதுநிலை பட்டதாரி, தாய்க்கு ஒரே மகள், இதற்கு முன் குற்றங்கள் புரியாதவர் என்ற காரணங்களை எல்லாம் இந்த கொலை குற்றத்துக்கு ஏற்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. கிரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பதாக நெய்யான்றின்கரை நீதிமன்றம் நேற்று அறிவித்தது. சூழல், டிஜிட்டல் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், கிரீஸ்மாவின் தாயார் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் மரண தண்டனை பெற்ற மிக குறைந்து வயது பெண் கிரீஸ்மா என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே பேட்டியளித்த அரசு வக்கீல் வினீத் குமார் கூறுகையில், ‘‘ கொலை குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படும் என உறுதியாக இருந்தேன். இது மிகவும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதிட்டேன். மிகச் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.