ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியத்தை ‘அமிர்த நீர்’ என குறிப்பிடுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜெயிலுக்கு அமைச்சர், பெயிலில் வந்த அமைச்சர் இருந்தாலும் ரயிலுக்கு அமைச்சர் இருப்பதில்லை. தமிழகத்துக்கென ரயில்வே அமைச்சர் இருந்தால் மேலும் ரயில் திட்டங்களை கொண்டு வர முடியும். கிழக்கு கடற்கரை சாலையில் ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டால் பசுமை சூழலுக்கு பாதிப்பு வருமா என்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாலேயே திட்டம் தாமதமாகிறது.
மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர். ஆனால், விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சிக்குட்பட்டு மாட்டின் சிறுநீர் மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றால் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலப்பது குற்றமாக கருதாதவர்கள், ஆயுர்வேதத்தில் கோமியத்தை அமிர்தநீர் என்று விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து கூறினால் குதிக்கின்றனர். 80 வகையான நோய்களுக்கு கோமியம் மருந்தாகிறது என ஆயுர்வேதம் கூறுகிறது. இவர்களுக்கு கோமியம் குடிப்பதில் பிரச்சினையில்லை. இதனால் டாஸ்மாக் வருமானம் குறைந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.
சினிமாவில் டேக் முடிந்து டேக் ஆப் செய்வதற்காக விஜய் பரந்தூர் சென்றுள்ளார். விமான நிலையம் அமைக்க மாநில அரசு தான் நிலத்தை தேர்வு செய்தது. மீனம்பாக்கம், பெங்களூரு நெடுஞ்சாலை ஆகியவற்றை எளிதில் அணுக வேண்டும் என்பதால் மாநில அரசு தேர்வு செய்த நிலத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இவ்வளவு நாள் கழித்து இடத்தை மாற்றச் சொல்லும் விஜய்யின் எண்ணம் பொதுநலமா, சுயநலமா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழசைக்கு பதிலளித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.