இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்தியாவில் வசிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மும்பை வீட்டுக்குள் அண்மையில் புகுந்த திருடன், அவரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு மகாராஷ்டிராவின் தானே பகுதியில் பதுங்கியிருந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை போலீஸார் கைது செய்தனர். வங்கதேசத்தை சேர்ந்த இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி தனது உண்மையான பெயரை மறைத்து பிஜாய் தாஸ் என்ற பெயரில் மகாராஷ்டிராவில் வாழ்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊடுருவுவது எப்படி? – இந்த நேரத்தில் வங்கதேச மக்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இதுகுறித்து மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவும் வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. அசாம், மேற்குவங்கம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இதை பயன்படுத்தி வங்கதேசத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.
குறிப்பாக மேற்குவங்கம், அசாம் வழியாக அதிக ஊடுருவல் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஒரு நபரை ஊடுருவச் செய்ய சில ஏஜெண்டுகள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கின்றனர். இந்தியாவில் ஊடுருவிய பிறகு அவர்கள் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை பெறவும் ஏஜெண்டுகள் உதவி செய்கின்றனர். இதற்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் பாஸ்போர்ட்கூட பெறுகின்றனர்.
மேற்குவங்கம், அசாமில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு வங்கதேச மக்கள் தொழிலாளர்களாக வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக டெல்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியதாக டெல்லியில் மட்டும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மும்பையில் 310 வங்கதேச இளைஞர்கள் பிடிபட்டனர். சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக மகாராஷ்டிரா முழுவதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வழக்குகள், கைது நடவடிக்கைகளுக்கு வங்கதேச மக்கள் அஞ்சுவது கிடையாது. கைதாகி சிறைக்கு சென்றாலும் சில மாதங்களில் ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். அவர்களை வெளியேற்ற கடுமையான சட்டங்கள் இல்லை.
இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச மக்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தெளிவான புள்ளிவிவரம் இல்லை. எனினும் நாடு முழுவதும் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் வசிக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்குவங்கம், அசாம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையிலான வங்கதேச மக்கள் நிரந்தரமாக வீடுகளை கட்டி வாழ்கின்றனர்.
ஊடுருவலை தடுக்க இந்திய, வங்கதேச எல்லைகளின் முக்கிய பகுதிகளில் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. எல்லையில் லேசர் சுவர் எழுப்பவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்: வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது அந்த நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் யூனுஸ், பாகிஸ்தான், சீனாவோடு அதிக நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்த சூழலில் வங்கதேச எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது. இதன்காரணமாக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு, ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.