இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், “சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும். நான் சரியாக விளையாடியிருந்தால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பேன். நான் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதேவேளையில், சாப்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியைப் பாருங்கள். அணி மிகவும் வலுவாக உள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.
மேலும் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அவர்களை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசியிருக்கிறார்.