திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு அரசர் காலம் முதலே அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கியதோடு, அவர் கள் வீடு திரும்பும் வரை பூந்தி, வடை போன்றவற்றையும் கோயில் சார்பில் வழங்கி வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டு என்.டி.ராமா ராவ் முதல்வரான பின்னர், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டியில் தினமும் அன்னதானம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தற்போது தெலுங்கு தேசம் ஆட்சி வந்துள்ளதை தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக அன்னதான திட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அன்னதானத்தில் ஒரு மசால் வடை பரிமாற தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளோட்டமாக தினமும் 5 ஆயிரம் வடைகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. பக்தர்களின் கருத்துகளைக் கேட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இதனை தொடர்ந்து அமல்படுத்தலாமா? என்பது குறித்து தேவஸ்தானம் முடிவு எடுக்கும்.
இம்மாதம் 10-ம்தேதி முதல் 19-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இந்த 10 நாட்களில் மட்டும் பக்தர்கள் உண்டியலில் ரூ.34.43 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.