டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
குறிப்பாக, டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, புதிய கரன்சியை உருவாக்க மாட்டோம் என்றும் டாலருக்கு பதிலாக வேறு கரன்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாரிஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது உட்பட பல நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். முதல் நாளில் அவர் பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவை வருமாறு:
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த அமைப்புக்கு நிதியுதவி செய்ய சீனாவைவிட அமெரிக்கா நியாயமற்ற முறையில் அதிகம் செலவிட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அமெரிக்க அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்த முறையை ரத்து செய்யும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இனிமேல் அனைவரும் முழுநேர பணிக்கு திரும்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து உடனடியாக விலகும் உத்தரவிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதல் முறையாக அதிபராக பதவியேற்றபோதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகியது. பின்னர் பைடன் அதிபரானும் மீண்டும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்கு எல்லையில் அவசரநிலை: அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக, அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு ராணுவத்தை அனுப்பப் போவதாகவும், பிறப்புரிமை குடியுரிமை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவித்தார். தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையையும் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததால், 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி கேப்பிட்டால் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் 1,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பன்முகத்தன்மையை ஊக்குவிப்பது மற்றும் எல்ஜிபிடிக்யூ சம உரிமை உள்ளிட்ட பல்வேறு நிர்வாக உத்தரவுகளை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினத்தவர்களை மட்டுமே அரசு அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய எரிசக்தி அவசரநிலையையும் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். உலகம் முழுவதுக்கும் எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா உருவெடுப்பதற்காக துரப்பண நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அமல்படுத்துவதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஜோ பைடன் ஆட்சியின்போது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேறிய இஸ்ரேலியர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.