நடுத்தர வர்க்கத்துக்கான தேர்தல் அறிக்கை: மத்திய அரசுக்கு 7 கோரிக்கைகள் வைத்த அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: வரவிருக்கும் டெல்லி பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். அதில் நடுத்தர வர்க்கத்தினருக்காக மத்திய அரசிடம் 7 கோரிக்கைகளை கேஜ்ரிவால் முன்வைத்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கத்தால் ஒரு பகுதி மக்கள் வஞ்சிக்கப்பட்டனர் என்று சாடிய கேஜ்ரிவால், நடுத்தர வர்க்கம் அரசாங்கத்தின் ஏடிஎம் ஆக பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேஜ்ரிவால் கூறுகையில், “இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் வரிச்சுமையால் நசுக்கப்படுகின்றனர். அவர்கள் வரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிக அதிகமாக வரி செலுத்துகின்றனர், ஆனால் குறைவாக பெறுகின்றனர். அந்தக் குழுவினர் (நடுத்தர வர்க்கத்தினர்) எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைகளிலும் இல்லை.

டெல்லியில் முதியவர்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் நலனை முற்றிலும் இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘சஞ்சீவினி திட்டம்’ போன்ற பல முன்னெடுப்புகளை ஆம் ஆத்மி அரசு எடுத்துள்ளது. வரி செலுத்துவோரின் வரிப்பணம், அவர்களுக்களுக்கே செலவு செய்யப்பட வேண்டும். இதனை இலசங்கள் எனக்கூறி நிராகரிப்பது தவறு.

இத்தகையத் திட்டங்கள் வெளிநாடுகளில் நடைமுறைப் படுத்தப்பட்டால் அவைக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அவற்றை நாம் அறிமுகப்படுத்தினால் அது இலவசங்கள் என்று முத்திரை குத்தப்படுகிறது. வாக்காளர்களின் பணத்தினை அவர்களின் நலன்களுக்கு பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.” என்று தெரிவித்தார்.

நடுத்தர வர்க்கத்தினருக்காக மத்திய அரசிடம் கேஜ்ரிவால் வைத்துள்ள 7 கோரிக்கைகள்:

  • கல்விக்கான பட்ஜெட்டை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி, தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துங்கள்.
  • நடுத்தர வர்க்கத்து குடும்பங்களுக்கும் உயர்கல்வி கிடைக்கும் வகையில் உதவித்தொகைகளை அறிமுகம் செய்யுங்கள்.
  • சுகாதாரத்துக்கான பட்ஜெட்டை 10 சதவீதமாக உயர்த்தி, சுகாதார காப்பீட்டுக்கான வரியை நீக்குங்கள்.
  • வருமானவரிக்கான உச்ச வரம்பினை 7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்துங்கள்.
  • மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள்.
  • ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் சலுகை வழங்குங்கள்.

மேலும் கேஜ்ரிவால் கூறுகையில், “மத்திய அரசு நடுத்தர வர்க்கத்துக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்யவேண்டும். வரும் வாரங்களில் இந்தக் கோரிக்கைகளை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள்” என்றார்.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. டெல்லியில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. யூனியன் பிரதேசத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறை வென்று ஆட்சியமைக்கும் தீவிரத்தில் ஆம் ஆத்மி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.