100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு 2 மாத சம்பளம் நிலுவை: உடனே வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இந்த ஸ்டாலின் மாடல் அரசு இன்றுவரை வழங்கவில்லை. ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. எனவே, இத்திட்டப் பயனாளிகளுக்கு உடனடியாக , நிலுவை சம்பளம் மற்றும் வேலையை அரசு வழங்கிட வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும், சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் ஆவார்கள். இந்த சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, இந்த ஸ்டாலின் மாடல் அரசு இன்றுவரை வழங்கவில்லை.

இந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, 100 நாள் வேலையையே நம்பி வாழும் ஏழை, எளிய கிராம மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால், பணம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு தைப் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. எனவே, 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குமாறும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.