“திறமையாளர்களையே அமெரிக்கா வரவேற்கும்!” – ஹெச்1-பி விசா விவகாரத்தில் ட்ரம்ப் உறுதி

வாஷிங்டன்: திறமை வாய்ந்த மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தான் விரும்புவதாகவும், இத்தகையவர்கள் அமெரிக்காவுக்குத் தேவை என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹெச்1-பி விசா விவகாரத்தை முன்வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த திங்கள்கிழமை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை ஆரக்கள் நிறுவனத்தின் சிடிஓ லேரி எல்லிசன், சாஃப்ட்பேங்க் சிஇஓ மசயோஷி சன், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மென் உள்ளிட்டோரைச் சந்தித்தார். பின்னர் அவர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஹெச்-1பி விசா மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு வருவது தொடர்பாக முன்வைக்கப்படும் வாதத்தின் இரு பக்கங்களையும் விரும்புகிறேன். அதேநேரத்தில், நம் நாட்டுக்கு வரும் மிகவும் திறமையான மனிதர்களை நான் விரும்புகிறேன்.

மேலும், ஹெச்-1பி விசா திட்டம் குறித்து நான் நன்கு அறிவேன். நான் இந்த திட்டத்தைப் பயன்படுத்துகிறேன். மதுபானம் சார்ந்த நிபுணர்கள் மட்டுமல்ல, வெயிட்டர்களில்கூட சிறந்த நபர்களை நாம் பெற வேண்டும். திறமைவாய்ந்த மக்கள் உள்ளே வர வேண்டும். இப்போது அதைச் செய்வதன் மூலம், நாங்கள் வணிகங்களை விரிவுபடுத்துகிறோம். அது அனைவரையும் கவனித்துக் கொள்கிறது. நான் உண்மையில் உணருவது என்னவென்றால், உண்மையிலேயே திறமையான மக்கள், சிறந்த மனிதர்கள் நம் நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டும். ஹெச்-1பி திட்டத்தின் மூலம் நாங்கள் அதைச் செய்கிறோம்” என தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள மிகவும் திறமையான வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்கள்தான் ஹெச்1-பி (H-1B) விசாக்கள். இந்த விசாக்களில் 72%-ஐ இந்தியர்கள் பெற்றுள்ளனர். இந்த விசா ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதாக ட்ரம்ப் கூறியதிலிருந்து ஹெச்-1பி விசா குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவ்விஷயத்தில் தனது நிலைப்பாட்டை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அவரது ஆதரவாளர்களில் சிலர் இந்த விசா, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் பலர் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 54 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் தோராயமாக 1.47% ஆகும். குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள். ட்ரம்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. | விரிவாக வாசிக்க > ‘பிறப்புரிமையால் இனி குடியுரிமை இல்லை’ – ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எத்தகைய பாதிப்பு?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.