கொல்கத்தா,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது, அணியில் இடம் கிடைக்காதது ஏன்? என்னை காயப்படுத்த வேண்டும். ஒரு நாள் போட்டியில் நான் நன்றாக ஆடியிருந்தால் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கும். நான் சிறப்பாக ஆடவில்லை என்றால், இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பார்த்தால் நன்றாக இருக்கிறது.
அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் இந்திய அணிக்காகவும், முதல்தர கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி உள்ளனர். அவர்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் போட்டியில் நான் நன்றாக ஆடவில்லை என்பதில் தான் வருத்தமே. ஹர்திக் பாண்ட்யாவுடன் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது.
இருவரும் நீண்ட காலமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி வருகிறோம். இந்திய அணியை முன்னெடுத்து செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். துணை கேப்டனாக இல்லாவிட்டாலும் அணியில் முடிவு எடுக்கும் குழுவில் பாண்ட்யாவும் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.