கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி கொலைக் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மேற்கு வங்க அரசு செய்திருக்கும் மேல்முறையீட்டுக்கு மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, சிபிஐ, சஞ்சய் ராய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பதில்கள் கேட்ட பின்பு முடிவு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுகுறித்த வழக்கினை விசாரித்து வரும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டெபாங்ஷூ பசாக் மற்றும் எம்டி ஷப்பர் ரஷிதி அடங்கிய அமர்வு முன்பு சிபிஐ கூறுகையில், “தண்டனை போதாமையின் அடிப்படையில் தீர்ப்பினை எதிர்த்து விசாரணை அமைப்பு மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். இந்த வழக்கினை சிபிஐ-யே விசாரணை செய்தது என்பதால் மாநில அரசு மேல் முறையீடு செய்ய முடியாது” .” என்று தெரிவித்தது.
மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், “இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை முதலில் பதிவு செய்தது மாநில அரசின் போலீஸாரே. பின்னரே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சட்ட ஒழுங்கு மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது.” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த உயர் நீதிமன்ற அமர்வு, மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, சிபிஐ, சஞ்சய் ராய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பதில்கள் கேட்ட பின்பு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தது. இந்த வழக்கு ஜன.27-ம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட இருக்கிறது.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கு: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணியில் பலர் இருப்பதாக மருத்துவர்களும், அந்தப் பெண்ணின் பெற்றோரும் கூறிவந்தனர்.
அத்துடன் மாநிலம் தழுவிய அளவில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பல முறை பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் முடியவில்லை. பின்னர் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.