வேலூர்: வேலூர் அடுத்த பெருமுகையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி மைதானத்தில் சமூக விரோதிகள் சிலர் ‘நைட் கிளப்’-பாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டத்தின் நுழைவு வாயில் பகுதியாக பெருமுகை உள்ளது.
வேலூர் மாநகரின் இலகுரக, கனரக வாகனங்களின் ஷோரூம்கள் அதிகம் நிறைந்த பகுதியாக இருப்பதுடன், அதிக வருமானம் ஈட்டும் கிராம ஊராட்சியாக பெருமுகை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பெருமுகை கிராம ஊராட்சி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தில் ஊழல், கட்டுப்பாடு இல்லாமல் இயங்கி வரும் கல் குவாரிகள், மணல் கடத்தல் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இதன் தொடர்ச்சியாக பெருமுகையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி உள்ளது. ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் பள்ளியை அந்த பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகளே பாழடித்து வருகின்றனர். ‘‘பெருமுகை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளி மைதானத்தில் தினசரி மதுபானம் அருந்துவது, கஞ்சா புகைப்பது, வெளி நபர்களை வரவழைத்து பார்டி கொண்டாடுவது என ஏறக்குறைய ‘நைட் கிளப்’ ஆக மாற்றியுள்ளனர்.
தினசரி காலையில் பள்ளி திறப்பதற்கு முன்பாக சேர்ந்திருக்கும் காலி மதுபாட்டில்களை அப்புறப்படும் பணியே பெரிய பணியாக உள்ளது. பள்ளியை பூட்டி வைப்பதும் இல்லை. இப்படியே போனால் அந்த பள்ளியை மக்களே விரைவில் மூடி விடுவார்கள். இதற்கெல்லாம் இங்குள்ள கல் குவாரிகளை நடத்துபவர்கள்தான் மூல காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற தைரியத்தில் சிலர் இப்படி அடாவடியான வேலையில் ஈடுபடுகின்றனர்’’ என கவலை கொள்கின்றனர் பள்ளியின் மீது அக்கறை கொண்டவர்கள்.
இதுதொடர்பாக, பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அய்யோ அந்த பள்ளியா? என்ற நிலைக்கு சிலர் மாற்றிவிட்டனர். கேட்டை பூட்டி வைத்தாலும் பூட்டை உடைத்து விடுவது, சுற்றுச்சுவரை தாண்டி எகிறி குதித்து உள்ளே செல்வதை வழக்கமாக கொள்கின்றனர். கேட்டால் இப்போது நடப்பதைவிட மோசமாக நடந்துகொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் ரவுடிகளை போல் செயல்படுகின்றனர். அந்த பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 250 மாணவ, மாணவிகள் படித்த நிலையில் தற்போது 550 பேர்படிக்கின்றனர்.
ஏன்? இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேள்வி கேட்டால் மதுபாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கிறார்கள். மாணவிகளின் கழிப்பறைகளை உடைத்து சேதப்படுத்துகிறார்கள். குறிப்பாக, நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டுமானம் நடைபெறும் பகுதியில்தான் அதிகம் சமூக விரோத செயல்கள் இரவு நேரத்தில் நடைபெறுகின்றன. காவல் துறையினர் ஓரிரு நாளுக்கு ரோந்து வந்தாலும், அதன் பிறகு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.
எங்களுக்கு அவர்கள் அடங்குவதில்லை. எங்களால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை. இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இது உங்கள் ஊர் பள்ளி, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் படிக்கின்றனர் என கூறினாலும் எங்களுக்கு மைதானம்தான் முக்கியம் என கூறுகின்றனர். பிறந்த நாள் விழாக்களையும், ஊர் திருவிழாக்களையும் அரசு பள்ளி மைதானத்தில் கொண்டாடுகிறார்கள். எங்கள் கைகளில் எதுவும் இல்லை’’ என்றனர்.